×

திருச்சி மேல தேவதானத்தில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிப்பு

திருச்சி, டிச.13: திருச்சி மேலதேவதானத்தில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்பட்ட கடைக்கு பூட்டு போட்டு, வடமாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு நோட்டீஸ் வழங்கி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்கவும், சுகாதாரமான பொருட்கள் விற்பனையை உறுதி செய்யும் வகையிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்டாலின், செல்வராஜ், ராமசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் திருச்சி மாநகரில் உள்ள மேலதேவதானம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 2 பேர் பானி பூரி மொத்த வியாபாரம் செய்து வந்ததை ஆய்வு செய்தனர். அதில் மாவில் பூச்சிகள் இருந்ததும், எலி வலைகள் இருந்ததும், பானி பூரிக்களை அழுக்கு துணிகளில் கட்டி் வைத்திருந்ததும், பானி பூரிகள் சுட்ட எண்ணையிலேயே மீண்டும் மீண்டும் பானி பூரி போட்டதும், தண்ணீரில் புழுக்கள், சுகாதாரமற்ற நிலையில் அவித்த உருளைக்கிழங்குகள் இருந்ததும், உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி பெறாமல் இயங்கியதும் தெரிந்தது. மேலும் பணியாளர்களும் அங்கேயே தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும் அனைத்து பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டு அந்த வீட்டிற்கு பூட்டு போட்டு சென்றனர். இந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா கூறுகையில், பொதுமக்கள் சாலையோர கடைகளில் வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்யும் இடங்களில் குறைவாக கிடைக்கிறதே என்று நினைத்து பானி பூரிகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கவில்லையெனில் வாந்தி, பேதி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். எனவே சாலையோரம் விற்கப்படும் கடைகளில் சுகாதாரமான முறையில் தாயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பொதுமக்கள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags : Trichy Mela Devadhanam ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை