×

வாகன ஓட்டிகள் கோரிக்கை

சிவகாசி, டிச. 13:  வெம்பக்கோட்டை வைப்பாற்று பாலத்தின் தடுப்பு தூண்கள் சேதமடைந்து கிடப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து நிலவுகிறது. வெம்பக்கோட்டை வைப்பாற்று பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளநீர் வைப்பாற்று படுகை வழியாக சென்று கடலில் கலக்கிறது, வெம்பக்கோட்டை  அருகே வைப்பாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்  நேரங்களில் பாலத்தின் மேற்கூரையை தட்டி நீர் செல்லும். இதுபோன்ற நேரங்களில் அந்த வழித்தடத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வைப்பாற்று பாலத்தின் பக்கவாட்டில் இரண்டு புறத்திலும் தடுப்பு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், டூவிலர்கள் சென்று வருகிறது. பாலத்தின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு தூண்களில்  வெள்ளை அடிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் வகையில் கருப்பு கலர் பெயிண்ட் அடித்துள்ளனர். ஆனால் இந்த தடுப்பு தூண்களில் அரசியல் கட்சியினர் சிவப்பு, மஞ்சள் கலந்த பெயிண்ட் அடித்துள்ளனர்.   இரவு நேரங்களில் இந்த பாலத்தை வாகனங்கள் கடந்து செல்லும் போது எதிரே வாகனங்கள் வந்தால் மஞ்சள் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதால் கவன குறைவாக விலகி செல்ல வாய்ப்புள்ளது. இதனால் வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதே போன்று பாலத்தில் உள்ள  அதிகமான தடுப்பு தூண்கள் இடிந்து கிடக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தில் மழை காலங்களில் வெள்ள நீர் சென்றால் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஆபத்து உள்ளது. இதில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யவில்லை. பாலம் தற்போது போதிய பலமின்றி காணப்படுகிறது. மேலும் பாலத்தில் உள்ள சிமென்ட் பூச்சுகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.  இந்த பாலத்தின் வழியாக தினமும்  ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.  எனவே வெம்பக்கோட்டை வைப்பாற்று பாலத்தை இடித்து புதிய மேம்பாலம் அமைக்க  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...