×

விவசாய நிலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்அரசு கொள்முதல் நிலையம் பணம், நேரம் விரையம் என கம்பம் விவசாயிகள் குற்றச்சாட்டு

கம்பம், டிச. 13: கம்பத்தில் விவசாய நிலங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அரசு நெல் கொள்முதல் அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை காட்டிலும் நெல் குவிண்டாலுக்கு 65 ரூபாய் கூடுதல் கிடைத்தும் பயனில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்காக கடந்த ஆக.29ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடவு செய்யப்பட்ட முதல் போக சாகுபடி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கம்பம், சாமாண்டிபுரம், சாமண்டியம்மன் கோயில் பகுதியில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கியுள்ளது.

அறுவடை செய்த நெல்மூடைகளை வீடுகளில் சேகரித்துவைக்க இடவசதியில்லாத விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், உடனடியாக பணப்பட்டுவாடா கிடைக்கவும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் கம்பம் மெட்டு ரோட்டில் உள்ள மண்ணெண்ணெய் விற்பனை நிலைய வளாகத்தில் தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த நெல் கொள்முதல் நிலையம் விளைநிலங்களுக்கு அருகே அமைக்காமல் விளை நிலங்களில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் பணம், நேரம் தான் விரயமாகும். விவசாயிகளுக்கு பலனில்லை என விவசாயிகள் சிலர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `` கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு அருகில்தான் அரசு நெல்கொள்முதல் அமைத்தனர். திடீரென இந்த ஆண்டு விவசாய நிலங்களிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளனர். ஏற்கனவே மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ரூ.1840 கொடுத்ததை தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1905 ஆக கொடுக்கிறார்கள்.

ஆனால், அறுவடை செய்த நெல்லை 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள் முதல் நிலையம் கொண்டு செல்ல, வண்டி வாடகை, கூலி என பார்க்கையில், குவிண்டாலுக்கு 65 ரூபாய் கூடுதல் கிடைத்தும் விவசாயிக்கும் பலனில்லை. நேரம் தான் விரயமாகிறது’’ என்றனர். இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தேனி மண்டல மேலாளர் சீதாராமன் கூறுகையில்,`` விளைநிலங்களுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் இல்லாததால் கடந்த ஆண்டு வாடகை இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு கலெக்டர் உத்தரவின் பேரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வியாபாரிகளை விட அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விளைநிலங்களில் இருந்து சற்று தூரம் என்றாலும் இங்கு போதிய இட வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது’’ என்றார்.

Tags : Cultivation farmers ,government procurement center ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!