×

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பெருகும் கூட்டத்தை கட்டுப்படுத்த டாக்டர்கள் ஊசியே போடுவதில்லை நோயாளிகள் பரபரப்பு புகார்

உத்தமபாளையம், டிச.13: தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவனைகளில் பெருகிவரும் புறநோயாளிகள் கூட்டத்தை தடுத்திட நோயாளிகளுக்கு ஊசி போடுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையாகவும், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட 5 இடங்களில் அரசு மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் மாவட்டத்தின் நகரங்கள், கிராமங்கள் அமைந்துள்ளதால் மாதத்தில் பலவேறு சீதோஷ்ண நிலைகளை மக்கள் அனுபவிக்கின்றனர். இதற்கு காரணம், புயல் இல்லாத காலங்களில் கூட மழை, குளிர்தொடங்காத மாதங்களில் கூட பனி, காலையில் கொட்டும் மழை, மதியம் கொளுத்தும் வெப்பம் என பருவநிலை மாறுபாடு என்பது மாவட்ட மக்களுக்கு திடீரென உண்டாகிறது. இதனால் சர்வ சாதாரணமாக காய்ச்சல், சளி, இருமல், பாதிப்புகள் உண்டாகின்றன. மழை அதிகமாக பெய்யும் காலங்களில் சிறிய வயதுடைய கைகுழந்தைகள், வயதான முதியவர்கள், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பாதிப்பு காலங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இங்குள்ள வெளிநோயாளர் பிரிவில் கால் கடுக்க நின்று தங்களுக்கான நோய் பாதிப்பை சொல்கின்றனர். பணியில் உள்ள டாக்டர்கள் ஊசி போடாமல் மாத்திரை சீட்டுக்களை மட்டும் கொடுக்கின்றனர். காரணம் கேட்டால் மாத்திரைகளை போடுங்கள் சரியாகிவிடும் என்கின்றனர்.

ஆனால், ஊசி போட்ட திருப்தி இருந்தால் மட்டுமே குணமாகும் என்ற நம்பிக்கை நோயாளிகளுக்கு உள்ளது. இதனால் அதிர்ச்சியுடன் திரும்பக் கூடிய நோயாளிகள் கடன் வாங்கியாவது இரவில் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்லும் அவலம் தொடர்கிறது. தனியார் கிளினிக் சென்றால் அங்குள்ள டாக்டர்கள் ஊசி போடும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஊி போட மறுக்கும் டாக்டர்கள், தனியார் கிளினிக் மட்டும் தேவையான ஊசிகளைப் போடுகின்றனர். அப்படியானால் இது மாதிரியான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதில்லையா அல்லது இருந்தும் போடமறுக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இது தினந்தோறும் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திட எடுக்கப்படும் நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான ஊசி போடுவதற்கு உரிய நடவடிக்கையை தேனி மாவட்ட கலெக்டர் எடுக்க முன்வரவேண்டும்.

இதுகுறித்து கருத்து கேட்க தேனி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சரஸ்வதியை தொடர்பு கொண்டு கேட்டபோது,`` மாநில அளவில் அரசு மருத்துவமனைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் ஊசி போடுவதில்லை. நெஞ்சுவலி, மூச்சிரைப்புடன் வரக்கூடிய நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார். இதுகுறித்து உத்தமபாளையம் ரபீக் கூறுகையில், ``கடைநிலையில் உள்ள நோயாளிகளின் புகலிடமே அரசு மருத்துவமனைகள்தான். இங்கு தேவையான சிகிச்சை கிடைக்கும். ஊசி கிடைக்கும். மருந்துகள் கிடைக்கும் என வருகிறார்கள். அதுவும் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட அரசுமருத்துவமனைகளில் ஊசி போடுவதில்லை என்ற புகார் வரும்போது, எங்குதான் நோயாளி செல்வார்? எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Doctors ,crowds ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை