உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி

சேலம், டிச.13: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் 21,645 பணியாளர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தமிழக ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27, 30ம் தேதியில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் 12 ஒன்றியத்திற்கு முதல் கட்டத்திலும், 8 ஒன்றியத்தில் 2ம் கட்டத்திலும் தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல், கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 16ம் தேதி கடைசிநாளாகும். இதனால் அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கலுக்கு தயராகி வருகின்றனர்.
Advertising
Advertising

இத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 15ம் தேதி நடத்தப்படுகிறது. இதையொட்டி, 20 ஒன்றியங்களிலும் பணியில் ஈடுபட பணியாளர்களை ஒதுக்கீடு செய்து பயிற்சி அளிக்க கணினி மூலம் குலுக்கலில் தேர்வு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ராமன் முன்னிலையில் பணியாளர்கள், கணினியின் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முதல் கட்ட பயிற்சியில் பங்கேற்க அறிவிப்பு ஆணை அச்சிடும் பணி தொடங்கப்பட்டது. அதனையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டார். பின்னர், கலெக்டர் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தலில், 12 ஊராட்சி ஒன்றியங்களில் 2,294 பதவிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 8 ஒன்றியங்களில் 2,005 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலுக்காக 1,110 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு வார்டு வாக்குச்சாவடிகள் 1,841ம், இரு வார்டு வாக்குச்சாவடிகள் 900ம் என மொத்தம் 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக 2,953 பேரும், வாக்குப்பதிவு அலுவலர்களாக 18,692 பேரும் என மொத்தம் 21,645 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு 20 ஒன்றியங்களில் வரும் 15ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்க அறிவிப்பாணை வழங்கப்படும். அதில் குறிப்பிட்ட இடத்திற்கு 15ம் தேதி காலை 10 மணிக்கு வந்து பயிற்சியில் பங்கேற்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: