கெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் சாலை அமைக்க நிலம் அளவீடு

கெங்கவல்லி, டிச.13: கெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் 4 கி.மீ தூரத்திற்கு சாலை அமைப்பதற்காக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர்.  கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் பச்சைமலை ஊராட்சியில் எடப்பாடி, மேல்பாலத்தான்கரை, கீழ் பாலத்தான்கரை, கட்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வலசக்கல்பட்டியிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்ல 4 கி.மீ தூரம் மலைப்பகுதியில் கரடுமுரடான பாதையில் மட்டுமே பயணிக்க முடியும். கெங்கவல்லி, கூடமலையில் உள்ள அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நாள்தோறும் 4 கி.மீ தூரம் நடந்து வந்து பள்ளிக்கு செல்கின்றனர். மேலும், எடப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால், தூளி கட்டி தூக்கி சென்று, தார் சாலையை அடைந்து அங்கிருந்து பஸ், வேன், லாரி மூலம் 9 கி.மீ தூரமுள்ள கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இப்பகுதியில் சாலை மற்றும் மருத்துவமனை வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி கூடுதல் ஆணையாளர் செல்வம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஆறுமுகம், ஊராட்சி சாலை ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் வலசக்கல்பட்டி, எடப்பாடி கிராமத்துக்கு சென்று 4 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைப்பதற்கான நிலத்தை அளவீடு செய்தனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த 4 கி.மீ சாலை பல ஆண்டுகளாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை அதிகாரிகளிடம்  முறையிட்டு தற்போது 9 அடி மண் சாலையாக பயன்படுத்தி வருகிறோம். இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்து கொடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: