அரசு போக்குவரத்துக் கழக விபத்து வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண ஏற்பாடு

சேலம், டிச.13: தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகளால் விபத்தில் சிக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் பாதிப்படைந்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கூட்டு நிதி, விபத்து இழப்பீடு தொகை நிதி மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் வயதினை கணக்கில் கொண்டு குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.இதன்மூலம் 1 வயது முதல் 15 வயது உள்ளவர்களுக்கு ₹2.5 லட்சமும், 16 வயது முதல் 60 வயது வரை ₹5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரையிலும், விபத்தில் உறுப்பு இழப்பு ஏற்பட்டால் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 9 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விபத்துகள் வழக்கு பதிவாகியுள்ளளது. இதில் மக்கள் நீதிமன்றம் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 293 கோடியே 72 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி வரை 1500 விபத்து வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. அதற்காக கும்பகோணம் கோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வை கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில சட்டப் பணி ஆணைக்குழு, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக விபத்து வழக்குகள் சமரச தீர்வு வரும் டிசம்பர் 14ம் தேதி நடக்கவுள்ளது. இதில் அந்தந்த கோட்ட அரசு போக்குவரத்து கழகம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் வழக்குகள் தீர்வு காணலாம். கும்பகோணம் கோட்ட மண்டலங்களில் உள்ளவர்கள் அந்தந்த மண்டலங்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சேலம், கோவை, மதுரை, நெல்லை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றம் மூலம தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: