×

உள்ளாட்சி தேர்தல் பணி உத்தரவை பெற பல மணி நேரம் காத்திருந்த ஆசிரியைகள் அவதி

நாமக்கல், டிச. 13:  நாமக்கல் சிஇஓ அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் பணி உத்தரவை பெற வந்த ஆசிரிய, ஆசிரியைகள், கலெக்டர் அலுவலகத்தில் உத்தரவு குறித்த பிரிண்ட் வராததால், பல மணி நேரம் காத்திருந்து நேற்று அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது.  இதற்காக மொத்தம்  1,729 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் மொத்தம் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதற்கட்ட பயிற்சி  வரும் 15ம் தேதி மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் சுழற்சி முறையில் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் பணியில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் 7 ஆயிரம் ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு உத்தரவு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு ஆசிரியர் உத்தரவை பெற வரவேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து தலா ஒரு ஆசிரிய, ஆசிரியைகள் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகம் வந்து காத்திருந்தனர். இவர்களை தவிர தொடக்கக்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள், வட்டார கல்வி அலுவலர்களும் பணி உத்தரவை பெற வந்து காத்திருந்தனர். மாலை 3 மணிக்கு தேர்தல் பணி உத்தரவு அளிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 3 மணிக்கும் உத்தரவு வரவில்லை. இதனால் முதன்மைகல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கலையரங்களில் ஆசிரிய, ஆசிரியைகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். பெண் ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்கள் பெரும் அவதி அடைந்தனர். ஒருவழியாக  இரவு 7 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணி உத்தரவு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. அவற்றை கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளி வாரியாக பிரித்து, மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் குமார், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் வழங்கினர். தேர்தல் பணிக்கான உத்தரவை பெற பல மணி நேரம் ஆசிரிய, ஆசிரியைகள் காத்திருந்ததால் பெரும் அவதி அடைந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை முதல் உத்தரவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. 12 ஆயிரம் அரசு அலுவலர்களுக்கும் தனித்தனி உத்தரவுடன் கூடிய பக்கங்களை பிரிண்ட் எடுக்க நீண்டநேரமானதாக கலெக்டர் அலுவலக தேர்தல் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...