×

சுங்கச்சாவடியில் குவியும் வாகனங்கள்

கிருஷ்ணகிரி, டிச. 13: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் குவியும் வாகனங்களால் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் தாங்கள் குறித்து நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக ஓசூர், கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலம் பகுதிக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை உள்ளிட்ட பிற மாநில தலை நகரில் இருந்தும் இந்த வழியாக தொழில் நகராமான ஓசூர், கர்நாடக மாநிலத்திற்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கும் கனரக வாகனங்கள் மூலம் பொருட்கள் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் வேலைக்கு, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் நேரங்களில் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் கிலோ மீட்டர் தொலைவிற்கு கட்டணம் செலுத்த அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தாங்கள் குறித்த நேரத்திற்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் சுங்கச்சாவடியில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது. இதில், டூவீலர்கள் செல்லக்கூட சில நேரங்களில் பாதையில்லாமல் நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் சுங்கச்சாவடியின் இரண்டு புறங்களிலும் உள்ள சர்வீஸ் ரோட்டினை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் உள்ளூர் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக்கண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் அங்கு குவியாமலும், சர்வீஸ் ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்