×

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் 13,595 அலுவலர்கள்

தர்மபுரி, டிச.13: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியில் 13 ஆயிரத்து 595 அரசு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. 16ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 17ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளுக்கு முதற்கட்டமாகவும், பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களில் 2ம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாவட்ட ஊராட்சியில் 18 வார்டுகளும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 188 ஒன்றிய குழு வார்டுகளும், 251 கிராம ஊராட்சிகளில் 2,343 வார்டுகளும் உள்ளன.     
முதல் கட்டத்தேர்தல் மற்றும் 2ம் கட்டத்தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 10,42,272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 5,32,914. பெண் வாக்காளர்கள் 5,09,242. 3ம் பாலினத்தவர்கள் 116 என மொத்தம் 10,42,272 வாக்காளர்கள் உள்ளனர். முதல்கட்ட தேர்தலில் 940 வாக்குச்சாவடிகளும், 2ம் கட்ட தேர்தலில் 781 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1721 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு வார்டுகள் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடிகள் 658 ஆகும். ஒரு வார்டு உள்ள வாக்குச்சாவடிகள் 1063. ஒரு வார்டு வாக்குச்சாவடிகளில், தேர்தல் பணியில் 7 பேரும், 2 வார்டு வாக்குச்சாவடியில் 8 பேரும் நியமிக்கப்படுகிறார்கள்.
 இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்களில், 13,595 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். முதல்கட்ட தேர்தலில் 7,437 பணியாளர்களும், 2ம் கட்ட தேர்தலில் 6,158 பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். தேர்தல் அலுவலர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதற்கட்ட பயிற்சி வரும் 15ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி வரும் 21,22ம் தேதிகளிலும், 3ம் கட்ட பயிற்சி வரும் 26 மற்றும் 29ம் தேதியும் நடக்கிறது. வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களை கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் சுழற்சி முறையில், தேர்வு செய்யப்பட்டு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருவதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பட்டியலை ஒட்டி வைத்துள்ளனர். அதனை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

428 வாக்குசாவடிகள் பதற்றமானவை
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், 428 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில், 282 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 2ம் கட்டத்தில் 146 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags : election ,Dharmapuri district ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு