×

சிவகங்கை மாவட்டத்தில் முற்றிலும் நின்றது மழை

சிவகங்கை, டிச. 13:  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறிது மழை கூட இல்லாமல் முற்றிலும நின்றது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டுதோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008 முதல் 2018ம் ஆண்டு வரை இடைப்பட்ட 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283 மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2018ம் ஆண்டு 924.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை 309.6 மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7 மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 2017ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 526 மி.மீ, 2018ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 306.21 மி.மீ பெய்ததே சராசரி மற்றும் அதைவிட கூடுதலாக மழை பெய்ததாகும். மற்ற ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் தொடக்கம் வரை தென்மேற்கு பருவ மழை 502.36 மி.மீ பெய்தது. இது சராசரியைவிட 193 மி.மீ அதிகமாகும். அக்டோபர் பிற்பகுதி முதல் தற்போது வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் வெறும் 54.94 மி.மீ மழை மட்டுமே பதிவானது. அதன் பிறகு தென்மேற்கு பருவமழை மூலம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ய தொடங்கியது. வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே பெய்தது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை பெய்யும் என்பதால் இந்த ஆண்டும் சராசரியைவிட கூடுதல் மழை பதிவாகக்கூடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் முற்றிலும் மழை இல்லாமல் பனி பெய்ய தொடங்கியுள்ளது. இறுதியாக கடந்த டிச.7ம் தேதி மாவட்டத்தில் 16.2 மி.மீ மழை பதிவானது. அதன்பிறகு மழை முற்றிலும் இல்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை நம்பி மட்டுமே விவசாய பணிகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. தற்போதுள்ள நீர் மற்றும் நிலத்தில் உள்ள ஈரப்பதத்தில் பயிர்கள் வளர்ச்சியில் பாதிப்பிருக்காது. இதேநிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு விளைச்சல் இருக்கும்’ என்றனர்.

Tags : Sivaganga district ,
× RELATED மழைக்கு நெற்பயிர்கள் முற்றிலும் சேதம்