காளையார்கோவில் அருகே புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

காளையார்கோவில், டிச. 13: காளையார்கோவில் அருகே நற்புதம் கிராமத்தில் ரேஷன்கடை அமைக்கவேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டிணம், நற்புதம், குறுந்தணி ஆகிய கிராமங்களில் 650க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த மூன்று கிராமத்திற்கும் ஒரு ரேஷன் கடை தான் உள்ளது. இதில் நற்புதம், குறுந்தணி கிராமமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூசையப்பர்பட்டிணம் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அவ்வாறு பொருட்கள் வாங்குவதற்குச் செல்லும் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குத் தனியாகச் செல்லும்  பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, நற்புததில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்க  வேண்டும் என்று 2 ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் மற்றும் தனி வட்டாட்சியரிடம் (குடிமை பொருள்) கிராமத்தினர் கையெழுத்திட்டு மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து குருந்தணி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் கூறுகையில், `` ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ஆண்கள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. நற்புதத்தில் பகுதி நேர ரேஷன்கடைக்கு இடம் ஒதுக்கி தருகிறோம் என்று கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : ration shop ,Kaliyarikovil ,
× RELATED ஓட்டு வீட்டில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை