×

பஸ்ஸ்டாப் கட்டிடத்தை சூழ்ந்த மழைநீர் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

சாயல்குடி. டிச. 13: சிக்கல் முதல் தேரிருவேலி செல்லும் கிராம வழித்தடத்தில் உள்ள சொக்கானை விலக்கு ரோடு பஸ் ஸ்டாப்பை சுற்றி மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் நிரந்தர நடைபாதை அமைக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே சிக்கல் கிராமம் வளர்ந்து வரும் நகரமாக விளங்குகிறது. இதனை சுற்றி சொக்கானை, வள்ளக்குளம், பேய்க்குளம், ஆதங்கொத்தங்குடி உள்ளிட்ட தொடர்ச்சியாக  10க்கும் மேற்பட்ட தொடர்ச்சியாக கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராம மக்கள் அத்திவாசிய பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்கள் வாங்கவும், மேல்நிலைக்கல்வி, மருத்துவ உதவி, அரசு சான்றுகள், உதவிகளை பெறுவதற்கு சிக்கல், கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடிக்கு வந்து செல்ல வேண்டும்.

விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும், இப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் சிலர் அருகிலுள்ள வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிக்கல் பகுதி மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர், பரமக்குடி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதி கிராமங்கள் பெரும்பாலும் மெயின் ரோடு மார்க்கத்தில் இல்லாமல் சற்று தொலைவில் அமைந்துள்ளது. இதனால் குக்கிராமங்களுக்கு பஸ் வசதியில்லாததால், மெயின்ரோடு மார்க்கத்திற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து வந்து பஸ் ஏறும் நிலை உள்ளது

இந்நிலையில் கடந்த 2015ல் சிக்கல், தேரிருவேலி சாலையில், சொக்கானை, பேய்க்குளம் விலக்கு ரோட்டில் பஸ் நிழற்குடை கட்டிடம் கட்டப்பட்டது. இதனை இப்பகுதியைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
இப்பகுதியில் கனமழை பெய்ததால் கண்மாய் பகுதியில் தண்ணீர் முழுமையாக பெருகிவிட்டது. இதனால் பஸ் நிழற்குடை கட்டிடத்தையும் தண்ணீர் சூழ்ந்து கிடக்கிறது. தற்போது மழை, பனிக்காலம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு வெளியூர் செல்ல பஸ் நிறுத்தம் வரும் மாணவர்கள், பொதுமக்கள் நிழற்குடைக்குச் செல்ல முடியாமல் மழை மற்றும் வெளியிலில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. மருத்துவமணை செல்லும் கர்ப்பிணி பெண்கள், முதியோர், நோயாளிகள் உட்கார இடமின்றி சாலையோரத்தில் உட்காரும் அவலம் உள்ளதாக கூறுகின்றனர். எனவே கண்மாய் பகுதியில் இருக்கும் நிழற்குடைக்கு சென்று வர நிரந்தரமான நடைபாதை மேடை அமைக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள், மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians ,bus stop building ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை