×

கழிவுநீர் வாறுகாலில் அடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் பரமக்குடி நகர மக்கள்

பரமக்குட, டிச. 13: கழிவுநீர் வாறுகால் சுத்தம் செய்யாததால் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளதால்,  செல்ல முடியாமல் தெருகளில் ஓடும் கழிவுநீரால் சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் பரமக்குடி நகர பொதுமக்கள். பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளை கொண்டுள்ளது. இந்நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்களின் குடிநீர் தேவைகளை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான வசதிகள் தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வராததால், நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் செல்லும் வாறுகால் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது.

இதை உடனுக்குடன் அகற்ற போதிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, யாணைக்கால், சிக்குன் குன்யா போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். கொசு கடி வாங்காதா நகர வாசிகள் யாரும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக காட்டுபரமக்குடி, எமனேஸ்வரம், பொன்னையாபுரம், கிருஷ்ணா தியேட்டர் போன்ற பகுதிகளில் வசித்து வரும் பலருக்கு ஒரே நாளில் திடீரென நடக்க முடியாமலும், கை, கால்கள் வீக்கம் ஏற்பட்டும் காணப்பட்டது.

சிக்குன் குன்யா வராமல் தடுப்போம் என பெயரளவில் கணக்குக்காக வழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தினால் மட்டும் போதாது, நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்லும் வாறுகால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான, சுகாதாரமான நகராட்சியாக இதை மாற்ற முடியும். கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பிளாஸ்டிக் பொருள்கள் தான். எனவே நகராட்சி நிர்வாகம் பரமக்குடி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடிற்கு கொண்டு வந்தாலும் அதை முழுமையாக அமல்படுத்தாததால் பயன்பாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. அத்துடன் தினமும் நகரில் விழும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வாறுகாலை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதைபோல் வாறுகால்வாய் அடைப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நகராட்சி எடுக்க வேண்டும். இவற்றை செய்தால் பரமக்குடி நகரம் கிளீன் சிட்டியாக மாறிவிடும் இதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் செய்திட வேண்டும் என்பதே பரமக்குடி நகர பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Paramakudi ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு