×

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் களைகட்டியது

மதுரை, டிச.13: உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் களைகட்டியுள்ளது. மனு தாக்கல் நிறைவிற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், எங்கு பார்த்தாலும், கூட்டம் கூட்டமாக வேட்பாளரின் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 16ம் தேதி கடைசி நாள் ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும் என தெரியவந்ததால், நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் களைகட்டியது. வேட்பு மனு தாக்கல் நடைபெறும் ஒன்றிய அலுவலகத்தின் வெளியே  எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். இதேபோன்று மனு தாக்கல் நடைபெறும் அரங்குகளில் இதே நிலைதான். தற்போது மனு தாக்கல் நடைபெறும் சுற்றுப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் அதிக அளவில் உணவுப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது.

மேலும் அரசியல் கட்சி வேட்பாளர்களும் இன்று முதல் மனு தாக்கலில் ஈடுபட உள்ளனர். இதனால் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள 3 நாட்களும் கூட்டம் மேலும் அலைமோதும் சூழ்நிலை உள்ளது.  ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர். கிராமத்தில் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனர். கடைசி 3 நாட்களில் அரசியல் கட்சியினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்வதால், அந்த பகுதியில் மேலும் கூட்டம் அலைமோதும் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மனு தாக்கல் நடைபெறும் ஒரு யூனியனுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அரசியல் கட்சியினர் கடைசி நாளான வரும் 16ம் தேதி அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வதால், போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட உள்ளது.

Tags : Supreme Court ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...