நத்தம் பஸ்நிலையத்தில் சாலை ‘ஓவர் டேமேஜ்’ வாகன ஓட்டிகள் அவதி

நத்தம், டிச. 13: நத்தம் பஸ்நிலையத்தில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நத்தம் பஸ்நிலையத்திற்கு திண்டுக்கல், பழநி, காரைக்குடி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கொடைக்கானல், திருச்செந்தூர், சேலம், தேவகோட்டை உள்பட பல பகுதிகளில் இருந்து வரும் தொலைதூர பஸ்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டவுன் பஸ்கள் என 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் திண்டுக்கல் மார்க்கமாக வருவதும், செல்வதுமான பஸ்கள் பஸ்நிலையத்தின் வட பகுதியில் உள்ள பாதையையே பெரும்பாடும் பயன்படுத்துகின்றன. இந்த பாதைக்கும் திண்டுக்கல்- காரைக்குடி சாலைக்கும் உள்ள இடைபட்ட பகுதியானது நத்தம் பேரூராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்குமான எல்லை கோடாக இருக்கிறது. இதை இருவருமே பராமரிக்காததால் அந்த இடம் முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் அவ்வழியே வந்து செல்லும் பஸ்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றன. மேலும் டூவீலர்களில் பெண்கள், குழந்தைகளுடன் வருவோர் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமுறும் நிலை உள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘நத்தம் பஸ்நிலையம் பகுதி வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். இதில் பஸ்கள் வெளியேறும் பகுதி, அருகிலுள்ள சாலைகள் பெரும்பாலும் குண்டும் குழியுமாக உள்ளது. இது வாகனத்தில் வந்து செல்பவர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் விபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. அரசு, சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி மட்டும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் பாதுகாப்பு மிகுந்த நிலையில் இருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நத்தம் பஸ்நிலையத்தில் சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே சாலைக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் ஏற்றம் உடையதாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: