கிராம உதவியாளர் இல்லாததால் சேவுகம்பட்டி விஏஓ ஆபீசில் பணிகள் பாதிப்பு பொதுமக்கள் அவதி

பட்டிவீரன்பட்டி, டிச. 13: சேவுகம்பட்டி விஏஓ அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சேவுகம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் எம்.வாடிப்பட்டியில் உள்ளது. சேவுகம்பட்டி கிராம நிர்வாகத்தில் பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த கிராம நிர்வாக அலுவலகம் முதல் தரத்தில் உள்ளதால் 2 கிராம உதவியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் உதவியாளர் யாரும் நியமிக்கப்படாமல் உள்ளனர்.

இங்கு பணியில் இருந்த பாண்டீஸ்வரன் என்ற கிராம உதவியாளர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணத்தில் மோசடி செய்த காரணத்தினால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக இங்கு பணிபுரிந்து வந்த முருகவேல் என்பவரை நக்கலூத்து கிராமத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் கடந்த 1 மாத காலமாக நிரந்தர கிராம உதவியாளர் இல்லை. இதனால் நிலஅளவை, குடியிருப்பு சான்றிதழ், பட்டா மாறுதல் விசாரணை போன்ற பல்வேறு பணிகள் தேக்கமடைந்து, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பணிநிமித்தமாக வெளியில் சென்றால் அலுவலத்தில் உதவியாளர் இல்லாததால் பூட்டிவிட்டு சென்று விடுகிறார். இதனால் பொதுமக்கள் அலைச்சலுக்குள்ளாகின்றனர். எனவே சேவுகம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கிராம உதவியாளரை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: