நிலக்கோட்டை இந்திராநகரில் தெருவில் தேங்கும் கழிவுநீருக்கு இதுவரை தீர்வு இல்லை தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

வத்தலக்குண்டு, டிச. 13: நிலக்கோட்டை இந்திராநகரில் தெருவில் தேங்கும் கழிவுநீருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு காணவில்லை. இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மாலையகவுண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது இந்திராநகர். இங்கு சுமார் 250 குடும்பங்கள் உள்ளன. 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர், கழிப்பறை, சாலை, கழிவுநீர் கால்வாய், மயானம் என எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் பல்கி பெருகி பல்வேறு நோய்களை பரப்பி வருகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் பாலா கூறுகையில், ‘எங்கள் பகுதி வெயில் காலத்தில் கூட மழை காலம் போல தெருவெல்லாம் சகதியாக காட்சியளிக்கிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சகதியில் வழுக்கி விழும் காட்சிகளை அடிக்கடி காணலாம். இதேபோல் கால்வாய் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்களும் பரவி வருகின்றன.

எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய், சாலை வசதியை செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories: