3 மாதமாக தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏற்றும் கிராம மக்கள்: குடிசை அருகே வைப்பதால் விபத்து அபாயம்

உத்திரமேரூர், டிச.13: உத்திரமேரூர் அருகே, கடந்த 3 மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால், கிராம மக்கள் தீப்பந்தத்தை ஏற்றி வைக்கின்றனர். கொட்டகை அருகில் வைப்பதால், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி ஊராட்சி வினோபா நகரில் 30க்கு மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச வீடுகள் வழங்கி, சாலை வசதிகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ஊராட்சி நிர்வாகம் சார்பில், அடிப்படை வசதிகளை பராமரித்து செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன், இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் பழுதாயின. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதையொட்டி, பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில், இருளில் சாலையில் விஷப்பூச்சிகள் ஏரளமாக உலா வருவதால், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இங்குள்ள மக்களில் சிலர் மின்சாரம் இல்லாமல், தெரு விளக்கிலேயே வாழ்பவர்களும் உள்ளனர். அவர்கள், கடந்த 3 மாதமாக தெரு விளக்குகள் எரியாததால், பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் குழந்தைகளில் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள், தீப்பந்தத்தை ஏந்தி கொண்டு சாலையில் நடந்து செல்கின்றனர். மேலும், விஷப் பூச்சிகள் பயத்தால், அவர்களது குடிசை வீடுகளின் வெளியே, தீப்பந்ததை வெளிச்சத்துக்காக ஏற்றி வைக்கின்றனர். குடிசை அருகே தீப்பந்தம் வைப்பதால், நள்ளிரவில் திடீரென பலத்த காற்று வீசும்போது, பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, உடனடியாக மேற்கண்ட பகுதியில், தெருவிளக்குகளை எரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Village firefighters ,
× RELATED திருவல்லிக்கேணியில் 3 அடுக்கு...