×

பஞ்சரான லாரியின் டிரைவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலி நிருபர்கள் கைது: போலீசாரை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம்

செங்கல்பட்டு, டிச.  13: பஞ்சரான லாரியின் டிரைவரை மிரட்டிய 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், ஆத்திரடைந்த அவர்கள், போலீசாரை மிரட்டியதுடன், அவர்களது கார் கண்ணடியை உடைத்தனர். இச்சம்பவம் மறைமலைநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி புறப்பட்டது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் உதயசங்கர் லாரியை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் மகேந்திரா சிட்டி அருகே லாரி சென்றபோது, லாரியின் டயர் பஞ்சரானது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கடையில், டயரை பஞ்சர் போட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய 3 பேர், லாரி டிரைவர் உதயசங்கரிடம், நாங்கள் பத்திரிகை நிருபர்கள். நீ பூட்டியுள்ள பஞ்சர் கடைகளில் டயர் திருடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனால் உன்னை போலீசில் பிடித்து கொடுக்க போகிறோம். வேண்டாம் என்றால், ₹3 ஆயிரம் கொடு என கேட்டு மிரட்டினர். அதற்கு அவர், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், டிரைவர் உதயசங்கரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து ₹500,  டயரை தூக்கி நிறுத்தும் ஜாக்கி எடுத்து அவர்களது காரில் வைத்தனர்.

அந்த நேரத்தில், மறைமலைநகர் போலீசார், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். 3 பேர், லாரி டிரைவருடன் பேசுவதை கண்ட போலீசார், அங்கு காரை நிறுத்தி விசாரித்தனர். உடனே 3 பேரும், போலீசாரின் கார் கண்ணாடியை உடைத்து, அவர்களை தகாத வார்த்தையால் பேசி, மிரட்டியதாக கூறப்படுகிறது. உடனே போலீசார், அவர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்று, வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு அருகே அஞ்சூர் கிராமத்தை சேர்ந்த கோமளாபதி (35). ஈச்சங்கரணையை சேர்ந்த மணிகண்டன் (24), புதுக்கோட்டை மாவட்டம் அந்தோணிசாமி (32) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், கோமளாபதி ஒரு புலனாய்வு மாத இதழில் பணியாற்றியதற்கான   அடையாள அட்டை இருந்தது. அதுவும் கடந்த 2017ம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இவர்கள் இதேபோல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களிலும் நிருபர்கள் என கூறி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து போலி பத்திரிகை அடையாள அட்டை, ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : reporters ,
× RELATED ‘Reporters Without Borders’ அமைப்பின் உலக பத்திரிகை...