×

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் புதர்மண்டி கிடக்கும் சுடுகாடு: சடலங்களை எரிப்பதில் சிரமம்

ஆவடி, டிச. 13: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரிலுள்ள சுடுகாடு பராமரிப்பின்றி முட்புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும், இங்கு மின் விளக்கு, தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சி 8வது வார்டு, திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
குறிப்பாக தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதி கிடையாது. இதனால் சடலங்களை எரிக்க, புதைக்க வரும்போது பொதுமக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். மேலும், அவர்கள் சடலத்துடன் வரும்போதே, குடங்களில் தண்ணீருடன் சுடுகாட்டுக்கு வருகின்றனர். இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படாததால் விளக்குகள் எரியாமல்  வீணாகி கிடக்கின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்கு காரிய மேடை 5 லட்சம் செலவில் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகிறது.

தற்போது சுடுகாடு முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் சடலங்களை சுடுகாட்டுக்கு கொண்டு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இங்குள்ள எரிமேடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழுதடைந்து கிடக்கிறது. இதனால், சடலத்தை எரிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை அப்போதைய நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.  இதனால் பொதுமக்கள் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இனியாவது ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து சரஸ்வதி நகரில் உள்ள சுடுகாட்டில் மின்விளக்கு, தண்ணீர் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவும்,  பூட்டிக்கிடக்கும்  காரியமேடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : city ,Thirumullaivayal Saraswati ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்