×

சிதிலமடைந்து கிடப்பதால் தினமும் விபத்து சாலையில் உறங்கி நூதன போராட்டம்: உடனே சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, டிச. 13: பெரியபாளையம் அருகே வெங்கல்-சீத்தஞ்சேரி கிராம சாலையில் ஆவாஜிபேட்டை வேற்றான்குளம் பகுதியில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.  இந்த பாலத்தை இணைக்கும் பகுதியில் சாலை போடவில்லை.  இதனால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு  சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதில் கார், பஸ், வேன், பைக்குகள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக சீத்தஞ்சேரி பகுதியில் இருந்து வெங்கல் பகுதிக்கும், வெங்கல் பகுதியில் இருந்து சீத்தஞ்சேரி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிக்கும் பைக்கிள் செல்பவர்கள் இந்த சாலையில் விழுந்து காயம் அடைகிறார்கள். பலமுறை நெடுஞ்சாலை துறையினருக்கு தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஆவாஜிபேட்டை கிராமத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் மூலம் வைக்கப்பட்ட  வழிகாட்டி பலகையை வனத்துறையினர் அகற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை கண்டித்தும்,  வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் ஆவாஜிபேட்டை, மாளந்தூர், கல்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலைக்கு அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் படுத்து தூங்கும் போராட்டம் நேற்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

ஆவாஜிபேட்டை கிளை செயலாளர் சோலை தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.கண்ணன், ரவி, கங்காதரன், பாலாஜி, ரமேஷ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதையறிந்த திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் சமரசம் பேசி, ‘சாலை அமைப்பது’ ‘வழிகாட்டி பலகை வைப்பது’ ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...