×

திருத்தணி நந்தியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தம்

திருத்தணி, டிச. 13: திருத்தணி அருகே தொடர் மழையால் நந்தியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ₹36 கோடி மதிப்பீட்டில் திருத்தணி நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழி சாலை அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பட்டாபிராமாபுரம் அருகே செல்லும் நந்தியாற்றின் குறுக்கே புறவழிச்சாலைக்காக ₹5 கோடியில் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறை, மண் பரிசோதனை செய்து, ஆற்றின் நடுவில் தூண்கள் அமைக்கும் பணி மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரு மாதத்திற்கு முன்புவரை ஆற்றில் 3 தூண்கள் அமைந்துள்ள நிலையில், இரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், புறவழி சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நந்தியாற்றின் குறுக்கே உயர்மட்ட பால பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால் தூண் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பருவமழை நின்றதால் தான் மீண்டும் பாலப் பணிகளை துவக்க முடியும். அதாவது, குறைந்த பட்சம் இரு மாதங்கள் வேலை செய்ய முடியாது’’ என்றார்.

Tags : flooding ,
× RELATED பாலம் கட்டுமான பணி துவக்கம்