×

உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சை, டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் நேற்று மட்டும் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகள் என இரண்டு கட்டமாக 5.462 பதவிகளுக்கு நடக்கிறது. 589 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியில் 28 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், பூதலூர், திருவையாறு, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாளான கடந்த 9ம் தேதி 85 பேரும், 2ம் நாளான 10ம் தேதி 66 பேரும், 11ம் தேதி 521 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 4ம் நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 158 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 675 பேரும் என மொத்தம் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 347 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,150 பேரும் என மொத்தம் 1,515 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வரும் 14ம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 16ம் தேதி கடைசி நாளாகும்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...