×

தஞ்சை மாவட்டத்தில் நாளையும் வேட்புமனுக்கள் பெறப்படும்

தஞ்சை, டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 2வது சனிக்கிழமையான நாளை (14ம் தேதி) வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 27ம் தேதியும், 2ம் கட்டமாக தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி இத்தேர்தல்களை சிறந்த ஒத்துழைப்புடன் சீரிய முறையில் நடத்துவதற்கு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முதன்மை அலுவலர்கள் ஆகியோருடன் நேற்று கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இதில் சனிக்கிழமையான வரும் 14ம் தேதியன்று வேட்புமனுக்கள் பெறப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். அப்போது திமுக, அதிமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். கூட்டத்தில் எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ சக்திவேல், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, இணை இயக்குனர் நிலையிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், உதவி இயக்குனர்கள், டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், தேர்தல் பணி தொடர்பான மாவட்ட நிலை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : district ,Tanjore ,
× RELATED களைகட்டிய தஞ்சை மாவட்டம்