×

அரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு

ஆலந்தூர்: கிண்டியில் அரசு அலுவலகத்தில் நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டில் விடுத்த அதிமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கிண்டியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கோட்டாட்சியராக காயத்ரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, திருச்சி அதிமுக முன்னாள் வட்ட செயலாளரும், எம்ஜிஆர் மன்ற தலைவருமான சென்னை போரூரை சேர்ந்த மதுரை பாலன் சந்திக்க வந்துள்ளார். இவர், முன் அனுமதி பெறாமல், நேரடியாக கோட்டாட்சியர் அறைக்குள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த உதவியாளர் ராஜேஷ்பாபு தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த மதுரை பாலன், அவரை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தார். பின்னர், கோட்டாட்சியர் காயத்ரியிடம், ‘‘நான் யார் தெரியுமா?, உங்களிடம் முன் அனுமதி பெற்றுதான் நான் உள்ளே வர வேண்டுமா?, என் பவரை காண்பித்தால் நீங்கள் இங்கு பணி செய்ய முடியாது,’’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக அதிமுக பிரமுகர் மதுரை பாலன் மீது கோட்டாட்சியரின் உதவியாளர் ராஜேஷ்பாபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வேளச்சேரியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, தான் குறிப்பிடும் நபரின் பெயரில் பட்டா வழங்கும்படி கோட்டாட்சியரிடம் மதுரை பாலன் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதை மனதில் வைத்து, கோட்டாட்சியருக்கு மதுரை பாலன் மிரட்டல் விடுத்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அரசு அலுவலகத்தில் நுழைந்து கோட்டாட்சியருக்கு அதிமுக பிரமுகர் மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...