மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு: புகாரை தொடர்ந்து ஆணையர் அதிரடி

சென்னை:  மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அதை சரிசெய்ய விலை நிர்ணய குழுவை அமைத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் விலை மிகவும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஆற்று மணலுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு எம்சாண்ட் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர், உரிய விதிகளை பின்பற்றிதான் விலை நிர்ணயம் செயப்படுவதாக விளக்கம் அளித்தார். மேலும், மாநகராட்சி பணிகளில் எந்த விதிமீறலோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய விலை நிர்ணய குழுவை அமைத்து மாநகராட்சி ஆனையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், மழைநீர் வடிகால் துறை தலைமை பொறியாளர் நந்தகுமார், பாலங்கள் துறை தலைமை பொறியாளர் ராஜேந்திரன், மின்சாரத்துறை தலைமை பொறியாளர் துரைசாமி, திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேஷன், பூங்காத்துறை தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவிற்கு கீழ், துணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் கன்வீனராக பணிகள் துறை கண்காணிப்பு பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில், மாநகராட்சியின் பல்வேறு பொறியியலை சார்ந்த கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பொறியியல் துறையின் துணைக்குழு தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்து விலை நிர்ணய குழுவிற்கு அனுப்ப வேண்டும். இந்த விலையானது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை நிர்ணயித்துள்ள விலைகளை பொருத்து நிர்ணயிக்க வேண்டும். இந்த விலை பட்டியலுக்கு முதன்மை தலைமை பொறியாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விலை நிர்ணய குழு அனுமதி அளிக்கும். அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட விலைகளை மட்டுமே மாநகராட்சி பணிகளில் பின்பற்ற வேண்டும். இந்த விலை நிர்ணய குழு ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை கூடி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இடையில், தேவைப்பட்டால் குழுவை கூட்டி விலைகளை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: