×

பயிர் காப்பீடு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்

மணமேல்குடி, டிச.13: பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கடும் அவதியும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். எனவே பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம்தேதி வரை நீட்டித்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயம் சரிவர நடைபெறவில்லை. இந்த வருடம் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயமும் செழிப்பாக நடைபெற்று வருகிறது.  மணமேல்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் அதிக பருவமழை பெய்ததால் விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து வருடங்களாக மழை இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது அதிக மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய வரும் 15 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மணமேல்குடி பகுதியில் கடந்த ஆண்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் பயிர்காப்பீடு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் அங்கு பதிவு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கியில் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது.  ஆனால் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கியில் பதிவு செய்ய அந்த வங்கியில் வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே பதிவு செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வங்கிக்கணக்கு தொடங்க பான் கார்டும் இருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தியன் வங்கி, மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். பெரும்பாலான மக்களிடம் பான் கார்டு கிடையாது. சாதாரணமாக பான் கார்டு வாங்குவதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகும்.

ஆனால் பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். பயிர் காப்பீடு சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சான்று வாங்க பலமுறை அலைய வேண்டியதிருக்கிறது. சிட்டா அடங்கல் வாங்க பல முறை அலைய வேண்டியுள்ளதால் விவசாயிகள் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் பயிர் காப்பீடு செய்ய வங்கியிலும், பிரவுசிங் சென்டரிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் தினமும் நாள் முழுக்க அலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  மேலும் பயிர் காப்பீடு செய்ய இணையதளமும் பலநேரங்களில் சரிவர செயல்படுவதில்லை. அப்படி செயல்பட்டாலும் வேகம் குறைவாகவே உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி வரை அவகாசம் தரவேண்டும் எனவும், அரசின் இசேவை மையங்களிலும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா