×

பழுதடைந்த அலுவலர்கள் குடியிருப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு

அறந்தாங்கி, டிச.13: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்துள்ள அலுவலர்கள் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய ஊராட்சி ஒன்றியங்களுள் அறந்தாங்கி ஒன்றியமும் ஒன்றாகும். 52 ஊராட்சிகளை கொண்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக கடந்த 1983ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த தற்போதைய திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.4 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பில் ஆரம்ப காலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய ஆணையர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் இந்த குடியிருப்புகள் இருந்ததால், அலுவலர்கள் தங்கியிருந்து அலுவலக பணிகளை தடையின்றி செய்வதற்கு வாய்ப்பாக இருந்தது. இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான குடியிருப்பில் உள்ள வீடுகளை முறையாக பராமரிக்காததால், வீடுகள் பழுதடைந்தன. இதனால் இந்த குடியிருப்புகளில் அலுவலர்கள் குடியிருக்க விரும்பவில்லை. இதனால் இந்த வீடுகளில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் குடியிருக்க தொடங்கி உள்ளன. மேலும் வீடுகளை சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளன.

இந்த புதர்களில் இருந்து விஷ ஜந்துக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியாற்றுபவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: ஊராட்சி ஒன்றியங்களில் பெரும்பாலும் பெண் அலுவலர்களே பணியாற்றி வருவதால், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலர்கள் குடியிருப்புகள் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் பெண் அலுவலர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் அலுவலர்கள் அலுவலகத்திற்கு அருகிலேயே தங்கியிருப்பதால், ஊராட்சி ஒன்றியங்களின் பணிகளும் தடையின்றி நடைபெற வாய்ப்பாக இருக்கும்.ஆனால் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு உள்ள பல அலுவலர்கள் குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அவர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளில் தங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தங்கள் சொந்த ஊர்களில் தங்கிருந்து அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு 30 முதல் 100 கி.மீ தூரம் வரை பயணம் செய்து வர வேண்டியுள்ளது. இதனால் அலுவலர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பழுதடைந்துள்ள அலுவலர்கள் குடியிருப்புகளை சீரமைத்து நவீனமாக மாற்றி அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...