×

தென்னவநல்லூர் கிராமத்தில் உள்வாங்கிய ஆழ்குழாய் கிணறு மண்ணை கொட்டி மூடப்பட்டது

ஜெயங்கொண்டம்,டிச.13: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தில் பயன்படாத ஆழ்குழாய் கிணறு உள்வாங்கியதால், மண் போட்டு மூடப்பட்டது.ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த வேம்புகுடி ஊராட்சி தென்னவநல்லூர் கிராமத்தில் காலனி தெருவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தா.பழூர் ஒன்றியத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு பணி துவங்கப்பட்டது. சுமார் 90 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்ட போது திடீரென ஆழ்குழாய் அமைக்கும் கம்பி உடைந்து விட்டது. இதனால் அந்த ஆழ்குழாய் கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இந்த ஆழ்குழாய் கிணற்றை அப்படியே விட்டுவிட்டு மாற்று இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்குழாய் கிணற்றில் பயன்படுத்த முடியாததால் அப்போது மண்ணை கொட்டி மூடிவிட்டனர். தற்பொழுது பலத்த மழை பெய்து வந்ததால் தண்ணீர் தெரு முழுக்க நிரம்பி நின்றது. இதனால் அந்த ஆழ்குழாய் கிணற்றின் மேலே இருந்த மண் அப்படியே உள்வாங்கி மீண்டும் ஆழ்குழாய் கிணறு மேலே தெரிய துவங்கியது. சில நாட்கள் அப்படியே இருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அருகே வசிப்பவர்கள் தங்களிடமிருந்த 3 அடி அகலம் கொண்ட ஒரு சிமெண்ட் பலகை மூடியை கொண்டு வந்து போட்டு மூடி வைத்திருந்தனர். இதை அறிந்த ஊராட்சி செயலாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் சேர்ந்து நேற்று காலை டிராக்டரில் கிராவல் மண் கொண்டு வந்து கொட்டி பொக்லைன் எந்திரத்தால் முழுவதுமாக மூடினர் இதனால் தற்போது பொது மக்களிடம் இருந்த அச்சம் நீங்கியது.

Tags : well ,village ,Thennavanallur ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...