×

அதிகாரி மனைவியை கொன்ற பெண் உள்பட இருவர் 2 ஆண்டுக்கு பிறகு கைது

ஜெயங்கொண்டம், டிச.13: ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் அரசு அதிகாரி மனைவியை கொலை செய்து நகை பணம் கொள்ளை அடித்த ஒரு பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் குணசேகரன்(50). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி(45). இவர்களுக்கு ஆதித்யன் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். கடந்த 2018 மார்ச் 29ம் தேதி குணசேகரன் வழக்கம்போல் திட்டக்குடிக்கு சென்றுவிட்டார். தினமும் பள்ளி முடிந்தவுடன் பாரதி பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவது வழக்கம். அன்று அழைக்க வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை. சமையல்கூடம் ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு குழந்தைகள் அலறினர். இதைகேட்ட அருகில் வசிப்பவர்கள் தெரு கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்து உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினார். பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையல் பலத்த காயமும் இருந்தது.

பாரதியின் கழுத்தில் இருந்த 10பவுன் தாலி செயின் மற்றும் 5பவுன் செயின் ஒன்றும் காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த அனைத்து பீரோக்களும் உடைந்த நிலையிலும் இருந்தன. பீரோ மற்றும் லாக்கரில் இருந்த நகை மற்று பணம் கணக்கிடப்படவில்லை.இச்சம்பவம்குறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வழக்கு பதிவுசெய்து பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். தற்போது அரியலூர் எஸ்பி சீனிவாசன் உத்தரவுபடி டிஎஸ்பி மோகன்தாஸ் மேற்பார்வையில் புதிதாக ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் தனிப்படை நியமித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இது குறித்து நேற்று ஜெயங்கொண்டம் பாப்பாங்குளம் ஏரிக்கரைை அருகே நின்றிருந்த ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் செந்தில்குமார் மனைவி ஜெயந்தி 47 மற்றும் அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஒக்க நத்தம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் சின்ராசு (22) விசாரணை செய்ததில் அவர்கள்தான் சேர்ந்து கொலை செய்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 15 பவுன் நகைகளை கைப்பற்றி இருவரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : persons ,officer ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது