×

பந்தலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

பந்தலூர், டிச.13: பந்தலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். பந்தலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்று பல தரப்பினரும் புகார் தெரிவித்துவந்தனர். இது குறித்து கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி பந்தலூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், விவேகானந்த சமூக சேவை சங்க நிர்வாகிகள் சுரேஷ் தீபக்ராம், செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனையில், இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை, நோயாளிகள் நலசங்கம், மருத்துவமனை வளர்ச்சி குழு அமைக்க படவில்லை.
ரத்த பரிசோதகர் இல்லை,  பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்காமல் கூடலூர், ஊட்டி அரசு மருத்துவமணைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால் நோயாளிகள் சரியான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த இணை இயக்குநர் பழனிச்சாமி பேசுகையில், மருத்துமனை நோயாளிகளுக்கு பகல் உணவு சமைத்து கொடுக்க சமையல் கூடங்கள் அமைக்க வேண்டியுள்ளது. மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் மழைநீர் கசிவு ஏற்படுகிறது இவற்றை சரி செய்ய அரசு நிதி தருவதில்லை. சமூக ஆர்வலர்கள் மூலம் நிதி திரட்டி கொடுத்தால் இவற்றை சரிப்படுத்த முடியும். மருத்துவர்கள் இரவில் தங்கி சிகிச்சை அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  எக்ஸ்ரே இயந்திரம் மற்றும் ரத்த பரிசோதகர்கள் அரசு நியமிக்கவில்லை.108 ஆம்புலன்ஸ் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க தடை விதித்துள்ளதால் சிரமம் உள்ளது. அதனை சரி செய்ய மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். மருத்துவமனை மேம்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்காததால் பெரும் சிரமம் உள்ளது என்றார். ஆய்வின்போது உதகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாலசுப்ரமணியம், பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரபு சங்கர், ஷாம், விவேக் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


Tags : Government Hospital ,Bandalur ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்