×

மாவட்டத்தில் நாளை மக்கள் நீதிமன்றம்

ஊட்டி, டிச.13: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், நாளை 14ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு தாலுகா மற்றும் மாவட்ட நீதி மன்றங்களில் நாளை 14ம் தேதி காலை 10.30 மணிக்கு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை உத்தரவின் பேரில் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் பந்தலூர் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் சமரசம் செய்ய கூடிய சிறு குற்ற வழக்குகள், மின்துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் மோட்டார் வாகன நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப பிரச்னை சம்பந்தமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.மேலும், தொழிலாளர் சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாரா கடன் சம்பந்தமான அனைத்து வழக்குகளும் எடுத்து கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம். இதனால் மனுதாரர்களுக்கும், எதிர்மனுதாரர்களுக்கும் மன உளைச்சல், பண விரயம், நேரம் போன்றை தவிர்க்கப்படுகின்றன.

மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. முத்திைரத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்பபெறும் வாய்ப்புள்ளது. வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற எண்ணம் இல்லாமல் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும். எனவே மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் இவ்வாய்ப்பினை பெற்று பயனடைலாம். இவ்வாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : District People's Court ,
× RELATED செவ்வாய்தோறும் படியுங்கள் கரூரில் மக்கள் நீதிமன்றம்