×

மருத்துவ சங்க மாநாடு நாளை துவக்கம்

ஈரோடு, டிச.13: இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு ஈரோடு பவானி ரோட்டில் உள்ள பிளாட்டினம் மகாலில் நாளை (14ம் தேதி) துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ராஜா ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இந்திய மருத்துவ சங்கத்தில் 37 ஆயிரம் டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான மாநாடு ஈரோட்டில் நடக்கிறது. இந்த மாநாட்டை கேரள மாநில முன்னாள் கவர்னர் சதாசிவம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் சங்கத்தின் தேசிய, மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், 1,200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கிறார்கள். அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். மாலையில் நடக்கும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், கருப்பணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பயிற்சி பட்டறைகளும், மருத்துவ கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இதில், மருத்துவ உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பிறந்த குழந்தைக்கு செவித்திறன் பரிசோதனை, தைராய்டு குறைபாடு கண்டறிதல் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் இலவசமாக நடத்தும் திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. மேலும், டாக்டர்களுக்காக பணி பாதுகாப்புப்படை உருவாக்கப்பட உள்ளது. போலி டாக்டர்களை தடுக்கும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றக்கோரியும் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சங்க மாவட்ட தலைவர் ஜெயந்த்குமார், செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : conference ,Medical Association ,
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...