தேர்தல் புகார் பெற கட்டுப்பாட்டு அறை துவக்கம்

ஈரோடு, டிச.13:  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை பெற ஈரோட்டில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது என எஸ்பி சக்தி கணேசன் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,576 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பதட்டமான வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். மாவட்டத்தில் 18 வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. அங்கும், அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்கப்படும். மக்களவை தேர்தலின் போது, பழங்குற்றவாளிகள் 625 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தோம். அதேபோல், தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் மற்றும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்து, ஆர்டிஓ., உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாவட்டத்தில் இயங்கும் 11 வெடி மருந்து குடோன்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேர்தல் தொடர்பான புகார்களை பெற மாவட்ட காவல் துறை சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில், 2 இன்ஸ்பெக்டர், 5 எஸ்ஐ மற்றும் போலீசாரை நியமித்து பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் வாகனங்களில் ரோந்து செல்ல 5 பேர் கொண்ட 5 போலீஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்குசாவடிகளில் பொதுமக்கள் வாக்களிக்க சென்று வர போதிய வழி, மின்சார வசதி, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories: