உள்ளாட்சி தேர்தலால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு, டிச.13:  ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாமல் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டத்தில் இருந்தும் விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.  மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வர். தமிழகத்தில் தொடர் மழை மற்றும் ஆறுகள், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பினால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு கடந்த சில மாதமாக மாடுகள் வரத்து குறைந்து வந்தது.இந்நிலையில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிப்பு மற்றும் மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று கூடிய சந்தையில் பசு-300, எருமை-100, கன்று-100 என 500 மாடுகளே வரத்தானது. இதனால், வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து, 5 மாடுகள் வாங்க வேண்டிய இடத்தில் ஒரிரு மாடுகளை மட்டும் வாங்கி சென்றனர். தேர்தல் முடியும் வரை இதே நிலை தான் நீடிக்கும் என மாட்டுசந்தை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: