×

உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

ஈரோடு, டிச. 13: ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி மீண்டும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மேயர் பதவியை கைப்பற்றி விடலாம் என்று ஆசையில் இருந்த ஆளும்கட்சி நிர்வாகிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 45 வார்டுகளை கொண்டு நகராட்சியாக இருந்தது. இதை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின், கடந்த 2008ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஈரோடு நகராட்சியை  மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நகராட்சி தலைவராக இருந்த குமார்முருகேஷ் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், நடந்த தேர்தலில் ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மல்லிகா பரமசிவம், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் பதவியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். ஆனால், இந்த பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்கள்.

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, அதிமுக எம்.எல்.ஏ. ராமலிங்கத்தின் மகன் ரத்தன்பிரதீப், பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீசன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகோபால், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கட்சியில் விருப்பமனு செய்திருந்தனர். தற்போது, மாநகராட்சி மேயர் பதவி மீண்டும் பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மேயர் பதவி கனவில் இருந்த ஆளும்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மகளிரணி நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேயர் பதவியை குறி வைத்து ஆளும்கட்சி பிரமுகர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களை கவுன்சிலராக நிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். அதேநேரத்தில், ஏற்கனவே கட்சியின் அனுபவம் வாய்ந்த பெண் நிர்வாகிகளும் களத்தில் இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில்,`மாநகராட்சி மேயராக ஏற்கனவே மல்லிகா பரமசிவம் இருந்துள்ளார். இதனால், இம்முறை பொது பிரிவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து கட்சி நிர்வாகிகள் விருப்பமனு செய்திருந்தனர். ஆனால், மீண்டும் மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் மண்டலக்குழு தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, முன்னாள் துணை மேயர் பழனிச்சாமியின் மனைவி மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது குடும்ப பெண் உறுப்பினர்களை நிறுத்த தயாராகி வருகிறார்கள்.
இதனால், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டால் சுலமாக வெற்றி பெறும் வார்டுகளை தேர்வு செய்து வருகிறார்கள். ஆனால், கட்சி தலைமை யாரை மேயர் வேட்பாளராக அறிவிக்கும் என்பது கடைசி நேரத்தில் தான் தெரியவரும்’ என்றனர்.

Tags : women ,office ,elections ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...