செண்பகாதேவி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை

தென்காசி, டிச. 13:  குற்றாலம்  மலை மீது அமைந்துள்ள குற்றாலநாத சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட செண்பகாதேவி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத விருச்சிக ராசி பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அகஸ்தியர் அமர்ந்த புண்ணிய மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள் வெகுசிறப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த கார்த்திகை மாத பவுர்ணமியின் சிறப்பு விருச்சிக ராசியில் வந்த பவுர்ணமிக்கு மகாலெட்சுமி அனுகிரக பவுர்ணமி என்பதால் அம்மனுக்கு மகாலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் நடந்தது.

முன்னதாக செண்பகாதேவி அம்மன் மற்றும் அகஸ்தியருக்கு மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியம், பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகை அபிஷேகங்கள், வனங்களுக்கு பூஜை, நிலவுக்கு பூஜை, கங்கைக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து கோயிலில் நவக்கிரகம் மற்றும் ஓம் என்ற எழுத்து வடிவில் 508 அகல் விளக்குகளில் தீபமேற்றி உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. பூஜைகளை அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி தலைமையில் நடத்தினர்.

இதில் அதிமுக மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், ஆவின் சுரேஷ், சங்கை சண்முகம், சிவகங்கை காளிச்சரண், கோமு, குழலா, அம்பிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் விஜயலெட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: