கடையம் வனச்சரகத்தில் யானைகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும்

கடையம், டிச. 13:  கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரமான பெத்தான்பிள்ளை குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூர், பங்களா குடியிருப்பு, சிவசைலம், கடவாக்காடு, ஆம்பூர் ஆகிய பகுதிளில் உள்ள தோட்டங்களில் யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் சார்பில் பூங்கோதை எம்எல்ஏ, நேற்று கடையம் வனச்சரகர் நெல்லை நாயகத்திடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: யானைகள் கிராமத்திற்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை நிரந்தரமாக ஊருக்கு புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னைக்காக இழப்பீட்டு தொகையை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சிறுகிழங்கு பயிரை சேர்க்க வேண்டும். பயிர் சேத நிவாரணத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

நிகழ்ச்சியின்போது மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்  சேர்மசெல்வன், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, ஆழ்வார்குறிச்சி துணை செயலாளர் அம்பேத்குமார் ரவி, ஆர்எஸ்.பாண்டியன், அவைத் தலைவர் வின்சென்ட், ஊராட்சி செயலாளர் அந்தோணிசாமி, விவசாயிகள் ஜேக்கப் செல்லத்துரை, ஜெகநாதன், ராஜன், இன்னாசி, சேகர், கருத்தப்பாண்டி, செல்வம், வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள், அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர். மேலும் தமிழக அரசின் வனத்துறை முதன்மை செயலர் சம்பு கல்லோலிக்கரிடம் பூங்கோதை எம்எல்ஏ தொலைபேசியில் பேசி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆம்பூர் -வடக்கு கோரையாறு வரை, கடனா அணை பின் பகுதி ஆகிய இடங்களில் சோலார் மின்வேலி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Related Stories: