தென்காசியில் பருந்து தாக்கியதால் கலைந்த தேனீக்கள்

தென்காசி, டிச. 13: தென்காசியில் இருந்து கீழப்புலியூர் செல்லும் வழியில் ரயில்வே கேட்  அருகேயுள்ள அசோக மரத்தின் உச்சியில் தேனீ கூடு இருந்தது. நேற்று மாலை 3.30 மணியளவில், இந்த தேனீ கூட்டை பருந்து ஒன்று தாக்கியது. இதனால் கலைந்த தேனீக்கள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோரை விரட்டிவிரட்டி தாக்கியது. இதையடுத்து ஆசிரியர்கள், உடனடியாக பள்ளியின் கதவு, ஜன்னல்களை அடைத்து தற்காப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ரமேஷ்,  மோகன்,  விஜயன்,   செல்வம்,  சுடர்மணி,  ஆல்பர்ட்,  செந்தில் பாபு ஆகியோர் விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்தபோதும், மீண்டும் பருந்து தேன்கூட்டை தாக்கியது. இதனால் அப்பகுதி முழுவதுமே மீண்டும் தேனீக்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட வீரர்கள், தேன் கூட்டின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். தொடர்ந்து  தேன் கூட்டையும் அப்புறப்படுத்தினர். இதன் பிறகே பள்ளி மாணவிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: