சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் தட்டுப்பாடு

வீரவநல்லூர், டிச.13: சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக சிறு காயங்களுக்கு கூட மருந்து கட்ட முடியாமல் நோயாளிகள் அவதியடைகின்றனர். சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையானது 40 படுக்கை வசதிகள் கொண்டதாகும். இங்கு சேரன்மகாதேவி, கூனியூர், காருகுறிச்சி, புதுக்குடி, கங்கனாங்குளம், சக்திகுளம் மற்றும் அரியநாயகிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு மருத்துவ பணியாளர்களாக 5 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் தற்போது 4 பேர் உள்ளனர். இதில் 2 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்களால் நோயாளிகளுக்கு ஓ.பி சீட்டு மட்டுமே வழங்கமுடியும். இதர கடினமான வேலைகளை செய்யமுடியாத நிலை உள்ளது. மீதமுள்ள 2 பேரில் ஒருவர் சமையலர் பணியில் ஆள் இல்லாததால் சமையல் வேலைகளை செய்து வருகிறார். மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படுவதால் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளவரால் இந்த ஒரு வேலையை மட்டுமே செய்ய முடிகிறது. எஞ்சியுள்ள ஒருவரால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டு போடுதல், புண்களுக்கு மருந்து வைத்தல் உள்ளிட்ட வேலைகளை முழுவதுமாக செய்யமுடியாத நிலை உள்ளது.

மேலும் இம்மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர் இடம் காலியாக உள்ளதால் ரூ.100 சம்பளத்திற்கு தினக்கூலி அடிப்படையில் வெளியாட்கள் 2 பேர் வேலை செய்து வருகின்றனர். தினக்கூலியாக இவர்கள் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு குறைந்த அளவே சுகாதார பணிகளை மேற்கொள்ள முடிகிறது. இதனால் உள்நோயாளிகள் வார்டில் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் மதியம் மற்றும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு தையல் போடுதல், மருந்து கட்டுதல் போன்ற வேலைகளை செய்ய ஆட்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுடன் வருபவர்கள் டாக்டர்களுடன் மல்லுகட்டும் நிலை உள்ளது.

இதுகுறித்து தென்காசி இணை இயக்குநர் அலுவலகத்திற்கு பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டும் ஆட்கள் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி டாக்டர்கள், செவிலியர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமணம் செய்யவேண்டும் என்பது நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.

Related Stories: