×

செய்யாறு அருகே பைக் ஆசாமிகள் துணிகரம் தலைமை ஆசிரியையிடம் 5 சவரன் தாலிச்சரடு பறிப்பு

செய்யாறு, டிச.13: செய்யாறு அருகே தலைமை ஆசிரியையிடம் 5 சவரன் தாலிச்சரடை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் கண்ணுகாபுரம் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி தேன்மொழி(48). இவர் அனக்காவூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தற்போது, உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேல்காளத்தூர் வாக்குச்சாவடியில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தலைமை ஆசிரியை தேன்மொழி நேற்று காலை 10 மணியளவில் மேல்ெகாளத்தூர் வாக்குச்சாவடிக்கு தனது மொபட்டில் சென்றார். செங்காடு கூட்ரோடு பகுதியில் வங்கி அருகே சென்றபோது எதிரே பைக்கில் வேகமாக வந்த 2 வாலிபர்கள், திடீரென தேன்மொழியின் மொபட் மீது மோதினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்த அந்த வாலிபர்கள், திடீரென தேன்மொழியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச்சரடை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி, தாலிச்சரடை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், தாலியை மட்டும் கொடுத்துவிடுங்கள் என கதறியபடியே பைக் ஆசாமிகளை பின்தொடர்ந்து சிறிது தூரம் ஓடினார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தலைமறைவாகினர்.

இதுகுறித்து, தேன்மொழி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். மேலும், சம்பவம் நடந்த வங்கியின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான பைக் ஆசாமிகளின் உருவங்களை வைத்து விசாரித்து வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : headmaster ,Cheyyar ,bike enthusiasts ,
× RELATED ஓமலூர் அருகே தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..!!