×

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் டிச. 16ல் கள்ளர்வெட்டு வைபவம்

உடன்குடி,  டிச. 13: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்  கோயில் கள்ளர் வெட்டு பெரும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளர் வெட்டு வைபவம் வரும் 16ம்தேதி  நடக்கிறது. குதிரைமொழி கிராமத்தில் உள்ள  தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் தனித்துவமிக்கதாகும். அநீதிகள் தலை  தூக்கும்போது அவற்றை அய்யனார் அழித்து நீதியை நிலைநிறுத்துவதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டு பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான  திருவிழா கடந்த நவம்பர் 17ம்தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6மணிக்கு வில்லிசை, சிறப்பு அபிஷேக  பூஜை  நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான நாளை (14ம் தேதி) முற்பகல் 11மணிக்கு  ஜவர்ராஜா, மாலையம்மன் பூஜை, இரவு 9மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.  நாளை மறுநாள் (15ம் தேதி) காலை 10 மணிக்கு மகளிருக்கான வண்ணக்கோலப்போட்டி, காலை 11மணி,  நண்பகல் 12மணி ஆகிய நேரங்களில் சிறப்பு அபிஷேகம், மாலை 6மணிக்கு மாவிளக்கு  பூஜை, இரவு 7மணிக்கு திருவிளக்கு பூஜை, தொடர்ந்து சமயசொற்பொழிவு,  இரவு 9மணிக்கு உற்சவர் வீதியுலா நடக்கிறது.

வரும் 16ம் தேதி காலை  6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், காலை 9மணிக்கு 108 பால்குடம்,  காலை 10 மணி, நண்பகல் 12மணி ஆகிய நேரங்களில் சிறப்பு அபிஷேகம், மாலை  4மணிக்கு சுவாமிகள் கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல், தொடர்ந்து கோயில்  பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு வைபவம் நடைபெறும். இதை காண பல்லாயிரகணக்கான பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது. மேலும் கள்ளர் வெட்டு நடந்த  இடத்தில் பக்தர்கள் போட்டி போட்டு புனித மண் எடுத்து தங்களது ஊருக்கு  சென்று சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், விளைநிலங்களில் விவசாயம்  செய்யும் போது இந்த மணலை பயன்படுத்துவர். இதுவே இத்திருவிழாவின் சிறப்பு  அம்சமாகும். ஏற்பாடுகளை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவிஆணையாளர் ரோஜாலி  சுமதா, கோயில் தக்கார் பொன்னி, செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கோயில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : pseudonym ,Therikkudiyiruppu Kalikkuvel Ayyanar Temple ,
× RELATED சென்னை கல்கி ஆசிரமத்தில் நடந்த...