×

புதுச்சேரி அரசு துறைகளில் 9,090 பணியிடங்கள் காலி

புதுச்சேரி, டிச. 13:  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூ., கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில துணை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் செயல்பாடுகள், எதிர்கால கடமைகள் குறித்து மாநில செயலாளர் அந்தோணி பேசினார். இன்றைய அரசியல் நிலை குறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் பேசினார். மாநில தலைவர் ராமராஜா, செயலாளர் எழிலன், மாநிலக்குழு உறுப்பினர் பெர்னா, ஜெயின்தாஸ், பழனி, சிவராமன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

புதுச்சேரி மாநிலத்தில் 38 அரசு துறைகளில் 37.929 பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 28,839 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 9,090 பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, கல்வித்துறையில் 2 ஆயிரமும், பொதுப்பணித்துறையில் 1,200ம், சுகாதாரத்துறையில் 700ம், மின்துறையில் 400ம், உயர்கல்வியில் 200 பணியிடங்களும் காலியாக உள்ளன. ஒரே ஒரு பணியிடத்தைக்கூட நிரப்புவதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையை கவர்னரும், தலைமை செயலரும் திட்டமிட்டு தடுத்து வருகின்றனர். குறிப்பாக, 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில் அப்பணியிடங்கள் நிரப்பாத காரணம் தெரியவில்லை. எனவே, அரசு துறை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் ெசயல்படாமல் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் மிஷினை செயல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கவர்னர், தலைமை செயலருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்துவது, இம்மாத இறுதிக்குள் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை இயக்கிடாவிட்டால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Tags : Puducherry ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்