இலவச மனைப்பிரிவில் வீடு கட்டாதவர்களின் பட்டா ரத்து

காரைக்கால், டிச. 13: காரைக்காலில் கீழகாசாகுடி, சமத்துவபுரம், முரசொலி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா பகுதியில் அடிப்படை வசதிகளையும் செய்து தராமல்,  வீடு கட்டாதவர்களின் பட்டாவை ரத்து செய்யும் முயற்சியிலும் வருவாய் துறை ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏஎம்எச் நாஜிம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காரைக்கால் தெற்கு தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்ட இடங்களில் வீடு கட்டாமல்  உள்ளவர்களின்  விவரங்களை கணக்கெடுக்கும் பணியை வருவாய் துறையினர் கடந்த ஒரு வாரமாக செய்து வருகின்றனர். இதில் வீடு கட்டாமல்  உள்ளவர்களின் பட்டாவை ரத்து செய்துவிட்டு வேறு நபர்களுக்கு கொடுக்க முயற்சி நடப்பதாக தெரியவருகிறது. மாவட்ட நிர்வாகம் அதற்கான ஒப்புதல் தந்ததாகவும் தெரிய வருகிறது. எல்ஜிஆர் திட்டம் மூலமாக மக்களுக்கு இலவச மனைப்பட்டா கொடுத்தால் முதலில் ஒரு கமிட்டி அமைத்து சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி பின்னர் பட்டா அளிப்பார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் பட்டா கொடுக்கப்பட்ட பகுதிகளான தலத்தெரு மற்றும் சமத்துவபுரத்தில் உள்ள இடங்களை முறையாக அளந்து கொடுக்கவில்லை. அரசும், வருவாய்த்துறையும் எவ்விதமான உதவியும் செய்யாமல் இருந்துவிட்டு, வீடு கட்டவில்லை என்ற காரணத்திற்காக பட்டாவை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல. இது இந்த தொகுதியில் மட்டுமல்ல.  கீழகாசாகுடி  பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் பட்டா கொடுத்தார்கள். அந்த பகுதியில் இதுவரையில் எந்த இடம் என்று காட்டவில்லை. முரசொலி நகரிலும் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அங்கும் இதுவரையில் இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. பிஎம்கேஒய் அல்லது காமராஜ் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணத்தை வழங்கினால்தான் மக்கள் வீடு கட்டுவார்கள். பணத்தையும் கொடுத்துவிட்டு, இடத்தையும் காட்டி விட்டு பின்னர் வீடு கட்டவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம். அதனை விட்டுவிட்டு  வீடு கட்டவில்லை என்றால் பட்டாவை ரத்து என்பதில் ஏன் இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்கள்? பைபாஸ் சாலையில் 40 பேருக்கு வருவாய்த்துறை மூலமாக இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. திடீரென்று பல்வேறு காரணங்களை கூறி அதை ரத்து செய்துவிட்டார்கள். இதுபோன்ற நிலை இனி நீடிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: