பெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு

புதுச்சேரி, டிச. 13: பெரியகடை காவல் நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சீனியர் எஸ்பி ராகுல் அல்வால், குற்ற சம்பவங்களை தடுக்க பீட் போலீசாரின் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க பீட் காவலர்களின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு கவர்னர் கிரண்பேடி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதன் எதிரொலியாக ஒவ்வொரு காவல் நிலையத்தையும் சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி நேற்று பெரியகடை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிரடியாக ஆய்வு செய்தார். பீட் காவலர்களின் ஒருங்கிணைப்பு முறையாக உள்ளதா, குற்ற செயல்கள் தொடர்பான தகவல்கள் சரியாக பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்பதை காவல் நிலைய அதிகாரியான செந்தில்குமார் மற்றும் எஸ்ஐக்கள் முத்துகுமார், முருகன் ஆகியோரிடம் கேட்டறிந்த சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அதிலுள்ள குறைகளை உடனே சரிசெய்ய உத்தரவிட்டார்.

மேலும் ரவுடிகளின் பட்டியல், அவர்கள் மீதான தொடர் கண்காணிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் கோப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதுதவிர கவர்னர் மாளிகை அருகில் நடந்த கார் திருட்டு வழக்கு தகவல் மட்டுமின்றி சூதாட்டம், போதைபொருள் தடுப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு மெத்தனபோக்கை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது கிழக்கு எஸ்பி மாறன் உடனிருந்தார். இதனிடையே புதுச்சேரி, குமரகுருபள்ளம் குடியிருப்பில் ஒரு ஒர்க்ஷாப்பில் நேற்று முன்தினம் போலி லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற எஸ்ஐ முத்துகுமார் தலைமையிலான போலீசார், அதை விற்ற அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டி துரையை (31) கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து செல்போன், ரூ.34,550 ரொக்கம், போலி லாட்டரி அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>