×

வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிதம்பரம், டிச. 13: பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பிற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார். ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது.  இதற்கான வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிதம்பரம் ரயிலடி அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளது. இந்த மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயனுடன் ஆய்வு செய்தார். குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி போன்ற பல்வேறு வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடிப்படை வசதிகள் இல்லாததை உடனடியாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுபோல் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் மையம் சிதம்பரம் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை அதிகாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்புவனகிரி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களையும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி அறிவுரைகளை வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில்: இதேபோல், காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் அமைய உள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள 6040 பதவிகளுக்கு சுமார் 2858 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதற்றமான வாக்குசாவடிகள் 756 என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த  வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 21,000 பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் சிறுசிறு குளறுபடிகள் உள்ளதாக வந்த பொதுமக்களின் குற்றச்சாட்டை அடுத்து வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு பணமோ, பொருளோ அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருளாகவும் கொடுக்கப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையாக வாக்களிப்பதை பொதுமக்களின் கடமையாக கருத வேண்டும். பணத்திற்காக வாக்கை விற்றுவிட்டால் அடுத்த 5 வருடங்களுக்கு நமது உரிமையை கேட்க முடியாமல் அவதிப்படும் நிலையை பொதுமக்கள் ஏற்படுத்த கூடாது என்றார்.

Tags : Polling Counting Centers ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்