×

குண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு

குலசேகரம், டிச.13:  நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை மாநில நெடுஞ்சாலைகளின் இணைப்புச் சாலையாக ஆற்றூர்- குட்டக்குழி - புலிப்பனம் சாலை உள்ளது. சுமார் 6 கிலோமீட்டர் நீளமுடைய இந்த சாலை ஆற்றூர், குட்டக்குழி, தெற்றை, புலிப்பனம் பகுதிகளை பிற பகுதிகளுடன் இணைக்கிறது. குட்டக்குழி சுற்றுவட்டார பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், இன்ஜி கல்லூரி, அரசு, தனியார் பள்ளிகள் உள்ளதால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சாலையில் ஆற்றூர் முதல் குட்டக்குழி வரை சுமார் 2 கி.மீட்டர் தூரம் ஆற்றூர் பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரழிந்து மேடுபள்ளங்களாக உள்ளது. பெரும்பாலான இடங்கள் சாலைக்கான அடையாளம் தெரியாமல் மண்சாலை போல மாறியுள்ளது. வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மழைகாலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. தினசரி விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது.

குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இந்த சாலை வழியாக செல்ல தனியார் வாகன ஓட்டிகள் மறுப்பதால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். இதனால் இந்த சாலையை செப்பனிட நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தினகரன் நாழிதழ் பலமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மனோதங்கராஜ் எம்.எல்.ஏ மற்றும் ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் தலைவி பீனா அமிர்தராஜ் ஆகியோர் தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தில் இந்த சாலையை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.  நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சாலை சீரமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி