×

கால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம்? காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்

நாகர்கோவில், டிச.13:  நாகர்கோவில் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை வந்து, ஆட்டை அடித்து கொன்று தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது அந்தபகுதி மக்களிடையே கடும் பீதியையும் ஏற்படுத்தியது. எனவே வனத்துறை கொடிய வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழக குடோன் அருகே புலிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் குமரி மாவட்டத்தில் மக்கள் வாழிடங்களில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் வனத்துறை அதனை மறுப்பது வழக்கம். இந்தநிலையில் பேச்சிப்பாறை அணை அருகே முள்ளம்பன்றியை சாப்பிட்ட புலி ஒன்று இறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டது. இது மக்கள் வாழிடங்கள் உள்ள பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியது. களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தையொட்டிய பகுதிகளில் குமரி மாவட்ட வனப்பகுதிகள் இருந்து வருகிறது.  

இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பராசக்தி கார்டனை ஒட்டி உள்ள பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததாக தகவல் பரவியது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாக தகவல் வெளியானதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் நேற்று பரவியது. இது தொடர்பாக அந்த நபர் நேற்று கூறியதாவது: நேற்று (நேற்று முன்தினம்) சுமார் 11.30 மணியளவில் நாய்கள் சத்தம் அதிகமாக கேட்டு கொண்டிருந்தது. இதையடுத்து நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது பராசக்தி கார்டன் கோயில் அமைந்துள்ள பகுதியில் புலி வந்து மதில் சுவரை குதித்து ஓடியது. பின்னர் வீட்டின் கேட்டை பூட்டி கொண்டு உள்ளே அமர்ந்துவிட்டேன்’ என்றார்.

புலி ஊருக்குள் வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். எனவே புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் நேற்று காலை முதல் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி பகுதி புலிகள் நடமாட்டம் இருந்து வந்ததால், அந்த புலிகள் ஏதேனும் புத்தேரி ஊருக்குள் இறங்கியதா? என சந்தேகம் வனத்துறைக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து புத்தேரி பகுதியில் புலியின் கால்தடம் பதித்துள்ளதா? எச்சம் ஏதேனும் காணப்படுகிறதா? என்று தொடர்ந்து தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ஆனந்த் கூறுகையில், ‘புத்தேரி பகுதியில் நடமாடியது காட்டுப்பூனை என்பது தெரியவந்துள்ளது. முதலில் பார்த்தாக கூறிய சாமியார் கூறிய தகவல்கள், அந்த பகுதியில் உள்ள கால்தடங்கள் ஆகியவற்றை கொண்டு வந்தது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் காட்டுப்பூனை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும் (நேற்று) இரவு 7 மணியளவில் ஊழியர் பிரசன்னா தலைமையில் வன ஊழியர் குழு ஒன்றை புத்தேரி பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். அதனை போன்று அந்த பகுதியில் வனத்துறையினர் காட்டுவிலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags : Forest Department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...