×

குழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு

களியக்காவிளை, டிச.13: குழித்துறை பகுதியில் தேவிகுமாரி மகளிர் கலை கல்லூரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்து மாணவிகள் வீட்டிற்கு புறப்பட்டுகொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மாணவிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் ஒரு ஆசிரியை மற்றும் 10 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். 20க்கு மேற்பட்ட மாணவிகள் சிறு காயத்துடன் வீடுகளுக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட 10 மாணவிகளும் மார்த்தாண்டம், களியக்காவிளை, நெய்யாற்றின்கரை மற்றும் திருவனந்தபுரத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி நேற்று முன்தினம் இரவு கல்லூரி முதல்வர் விஜயபிரபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாணவிகளின் குடும்ப சூழல் குறித்து கேள்விப்பட்ட சரண்யா அறி இது குறித்து குழித்துறை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ஞானகுருவேலனிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி முன்னணி டாக்டர்களை வரவழைத்து உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்ைக மேற்கொள்ளலாம் என்று டாக்டர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டம், களியக்காவிளை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 3 மாணவிகள் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு இரவோடு இரவாக கொண்டுவரப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. படுகாயமடைந்த 10 மாணவிகளில் ஒருவர் விஜித்திரா(19). குழித்துறையை அடுத்த கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த ராமசந்திரன் - சுகுமாரி தம்பதியின் மூத்த மகள். ராமச்சந்திரன் ெகாத்தனார் வேலை பார்த்து வருகிறார். சுகுமாரி உடல் நலக்குறைவால் 4 ஆண்டுகளாக வீட்டில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். ராமசந்திரன் அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய விஜித்திராவை ெபாதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரை பரிசோதித்த டாக்டர்கள் இடுப்பு மற்றும் கால் பகுதியில் அதிக அளவு முறிவுகள் இருப்பதால் உடனடியாக 5 ஆபரேஷன்கள் செய்யவேண்டும் என்றனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பணம் செலுத்த வழியில்லாமல் ராமசந்திரன் ெசய்வது அறியாமல் தவித்தார். தகவல் அறிந்த தேவிகுமாரி கல்லூரி ஆசிரியைகள் இரவோடு இரவாக பணம் திரட்டி ஒரு ஆசிரியையின் கணவர் மூலம் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொடுத்துவிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு ஆபரேஷன் நடந்தது. நேற்று இன்ெனாரு ஆபரேஷன் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று விஜயதரணி எம்எல்ஏ கல்லூரி சென்று முதல்வர் விஜயபிரபாவிடம் ஆலோசனை நடத்தினார். விஜித்திரா நிலைமை குறித்து விஜயதரணி மாவட்ட கலெக்டரிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் தரப்பில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் விஜித்திராவை அழைத்து வந்தால் இந்த சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்களை தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இருந்து கொண்டு வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து இத்தகவலை விஜயதரணி, விஜித்திராவின் உறவனர்களிடம் கூறினார். தற்போது அவரை அழைத்து வருவதற்கான முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். உறவினர்களிடம் நிதி உதவியும் விஜயதரணி வழங்கினார்.
இந்நிலையில் ேநற்று கல்லூரி மாணவிகள் தரப்பில் படுகாயமடைந்த மாணவிகள் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

Tags : College student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது